இலங்கை முஸ்லிம்கள், தென்பகுதி சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வந்தது போலவே, தொன்றுதொட்டே வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழர்களுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்குப் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படாதிருப்பது ஒரு குறையாகும்.
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் அரபிகளது வழித்தோன்றல்களாக இருந்தும் அரபைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை. சுமார் 70% முஸ்லிம்கள், சமூக தொடர்புகளுக்கான பிரதானமான மொழியாக சிங்களத்தைக் கொள்ளும், வடக்கு கிழக்கு தவிர்ந்த, வெளிமாவட்டங்களில் வாழ்ந்த போதிலும், அந்த சிங்களம் அவர்களில் பெரும்பாலானவர்களது தாய் மொழியாக இல்லை.
அவர்களும் பெரும்பாலும் தமிழையே தாய் மொழியாகக் கொள்கிறார்கள். இதிலிருந்து முஸ்லிம்களுக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குமிடையேயுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தை தமது மொழியாகக் கொள்ளாதிருப்பதால் பல சிரமங்களையும் நெருக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல், அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழை தமது தாய்மொழியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குக் கூட முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துவருவதோடு, இன்பத் தமிழ் என அதனை கூறுகிறார்கள்.
தமிழை அரபு எழுத்துக்களில் ‘அரபுத்தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போதனைகளை அதனூடாகச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என அதனைப் போற்றினார்கள்.
மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் சகவாழ்வைப் பேணிவந்தமையை இது குறித்து நிற்கிறது. இரு இனங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக தமிழ் மொழி அமைந்தது.
இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள்; மதத்தால் முஸ்லிம்கள்’ என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் கூறுமளவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறுபட்ட ஒற்றுமைகளோடு வாழ்ந்து வந்திருகிறார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியைப் போலவே மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சிறுபான்மையாக வாழும் அவர்களது கிராமங்கள், தமிழ் கிராமங்களுக்கு அருகருகே அமைந்துள்ளன.
வியாபாரம், கலாசாரம், அரசியல், சமூக உறவுகள் போன்றன இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்ததாகக் கொள்ள முடியும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் பல்வேறுபட்ட விகிதாசாரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணத்துக்காக சில பிரதேசங்களது புள்ளிவிபரங்களை மாத்திரம் இங்கு நோக்கலாம்.
மன்னார் முஸ்லிம்கள்
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாந்தோட்டத் துறைமுகத்துடனான அரபிகளது தொடர்பு மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
12ம் 15ம் நூற்றாண்டு காலத்தில் இப்பிரதேசங்களுடனான (அவர்களது) தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலேக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் கருத்துப்படி இக்காலகட்ட மன்னார் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்பட்டது. மாந்தோட்டத் துறைமுகம் இவர்களது கப்பல் இறங்கு துறையாகவும் வர்த்தக பண்டகசாலையாகவும் விளங்கியது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னார் பகுதி முஸ்லிம்கள் ஏற்றிறக்குமதியில் மட்டுமன்றி, முத்துக்குளிப்பது, சங்கு எடுப்பது, படகோட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
காலனித்துவ ஆட்சியாளர்கள் இவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இருப்பினும் முத்துக்குளிப்பிலும், சங்கு குளித்தலிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்பட்டமைக்கு அத்தொழிற்துறை சார்ந்த அம்மக்களது தேர்ச்சிதான் காரணமாகும்.
1902ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, மன்னார் மாவட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புக்களில், மாந்தை- நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 11 குடியிருப்புக்கள் இருந்தன.
ஆனால், இப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப்பெற்றுள்ளன. இன்னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாகத் தொடர்பற்றிருந்தன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் தமிழர்களுடன் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இனத்தவரும் பரஸ்பரம் உதவி செய்தார்கள்.
கொடுக்கல் வாங்களில் மிகவுமே கெளரவமாக நடந்து கொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாது. அப்பிரச்சினையை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை வழிகளைக் கொண்டிருந்தனர்.
ஒருவரது சுகதுக்கங்களில் மற்றவர் மிகச் சரளமாகப் பங்குபற்றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப் பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விருந்தோம்பல்களில் மற்றவர் எவ்வித சங்கடமுமின்றி பங்கேற்கும் வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது. (4)
யாழ்ப்பாண முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தார்கள். எம். எஸ். அப்துல் ரஹீம் என்பவர், இலங்கையில் முஸ்லிம்கள் தென் பகுதிக்கு முன்னர் வட பகுதியில்தான் முதன் முதலில் குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
‘கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் தமிழர் ஆதிக்கம் இலங்கையின் தென்பகுதி, மேற்குப் பகுதிகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. வட பகுதியே காலத்துக்குக் காலம் நிகழ்ந்த தென்னிந்தியப் படையெடுப்புக்களாலும் குடியேற்றங்களாலும் தமிழர் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இங்கு முதலில் முஸ்லிம்கள் குடியேறி அங்குள்ள மக்கள் மத்தியில் அடைந்த செல்வாக்கக் காரணமாக ஏற்கனவே குடிகொண்டிருந்த இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு இலக்கானதன் காரணத்தால் உயர் குடியிற் பிறந்த நல்லொழுக்கமுடைய இந்துப் பெண்மணிகள் இஸ்லாத்தை ஒப்புக்கொண்டு இவர்களுக்குத் துணைவியராகும் வாய்ப்பைப் பெற்றனர்.
’ இப்படியாக தமிழ்ப் பெண்களை அராபியர் மணந்ததனாலேயே அவர்களின் தாய்மொழி தமிழாக இருக்கிறது. முதற் குடியேற்றம் சிங்கள மக்கள் சூழவுள்ள பேருவளையில் நிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக இருந்திருக்க வேண்டும்.
அத்துடன் சிங்களவரின் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் பண்பாட்டு அம்சங்களில் தமிழர் பண்பாட்டின் செல்வாக்கு விரவியிருத்தலை நன்கு அவதானிக்க முடியும்.
போர்த்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிவாசல்கள், கட்டிடங்கள் யாவற்றையுமே சிதைத்து அந்தக் கற்களைக்கொண்டே பறங்கியத் தெருப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணித்தபடியால் எந்தவிதமா வரலாற்றுச் சான்றுகளும் பெறமுடியாது போய்விட்டன.” என அப்துர் ரஹீம் எழுதுகிறார். இக்கூற்று ஆய்வுக்குரியதாகும்.
யாழ்ப்பாணம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் நுகரைப்பற்று எனும் பகுதியில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே (துலுக்கர்) வாழ்ந்தார்கள் என்றும் சான்றுகள் கூறுகின்றன. 13ம் நூற்றாண்டில் துலோத்துங்க என்பான் யா¡ப்பாகுவையை அழித்த வேளை யாவுகர்களை (முஸ்லிம்களை) சிறைபிடித்தான். சாவகச்சேரியில் அவர்களைக் குடியேற்றினான்.
யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினார் தீவு, மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு எனும் தீவுகளிலும் பரந்து வாழ்ந்துள்ளனர்.
இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்னும் முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றையும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகளது தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்”
மிருசுவிலில் உள்ள உசன், சாவகச் சேகரிக்கும் சங்கத்தானுக்குமிடையிலுள்ள சோனகன் புலவு போன்ற இடப்பெயர்கள், அப்பிரதேசங்கள் முஸ்லிம்களது குடியிருப்புக்களாக இருந்தமைக்கான சான்றுகளாகும். நல்லூர் கந்தசாமிக் கோயிலை அடுத்துள்ள பகுதியில் சோனகன் தோப்பு என்ற பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு தற்போதும் ஒரு ஸியாரம் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் யாழ் குடாநாட்டிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் தமிழ் சமூகத்துடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்தனர். 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது எனலாம்.
முல்லைத்தீவுப் பகுதி
வட மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்தொகையில் 5% ஐக் கொண்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைத் தமிழர்களோடும், சிறுபான்மைச் சிங்களவர்களோடும் கலந்து வாழ்ந்து வந்தார்கள். 1921ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மரிடைம் பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்லிம்கள் 6.5% ஆகவும், முல்லைத்தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்தார்கள்.
முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800ம் ஆண்டு முதல் வாழுகிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என கலாநிதி ஹஸ்புல்லாஹ் கூறுகிறார்.
அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்களே உள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த மூன்று கிராமங்களான தண்ணீரூற்று,
நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பவற்றின் வரை படத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்ளிவாசல், இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் இப்பிரதேசத்தில் அருகருகே அமைந்திருப்பது இப்பிரதேசத்தின் நீண்டகால இன ஐக்கியத்திற்குச் சான்றாகும்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர்களது சகவாழ்வு மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் கி. பி. 5ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அரபிகளில் ஒரு சாரார் பூநொச்சிமுனையில் குடியேறி வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் காத்தான்குடிப் பகுதிக்கும் வந்ததாகவும் இவர்களிடமிருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் தோற்றம் பெற்றதாகவும் பி. ஆர். சிற்றம்பலம் கூறுகிறார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட ‘முக்குவர்’ எனும் ஒரு சாரார் அங்கிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்த போது அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த திமிலர்கள் அவர்களது வருகையை விரும்பாததால் அவர்களைத் துரத்தியடிப்பதற்கு நாடினர். அப்போது, முக்குவர்கள் அரேபியரது உதவியை வேண்டி நின்றனர்.
அவ்வாறு அந்த அரபிகள் அந்த திமிலர்களை துரத்தியடித்தனால் அந்த அரபிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் அதிகரித்து அவர்களுக்கு மிகுந்த கெளரவம் கொடுத்தனர். தற்காலத்தில் குருமண்வெளி இந்துக் கோவிலில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்படுகிறது.
மேலும், ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் உள்ள குலவிருது பற்றிய பாடலில், முஸ்லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்படுகிறது. முக்குவர்கள் சவக்குலி ஏலம் விடும் போது ‘முக்குவர்களைக் காத்த பட்டாணியர் போற்றி’ என்று அதனை முடிக்கிறார்கள். இவற்றை அவதானிக்கையில் முக்குவர் - முஸ்லிம்கள் உறவு பற்றிக் தீர்மானிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் என்பார் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும் பட்டாணிகளும் (முஸ்லிம்களும்) வந்து போன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரத்தைக் கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தெளிவாக்குகிறது. ‘காட்டான், பட்டாணி, சுல்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகம் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர். என அந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
முக்குவர்கள் தமக்கு உதவி செய்த முஸ்லிம்களிடம் கைமாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்றுமாறு கேட்டபோது, முஸ்லிம்கள் முக்குவர்களின் பெண்களை அடைந்து, இரத்த உறவைப் பலப்படுத்தினர். முஸ்லிம்கள் முக்குவர்களுடன் இணைந்து போரிட்டதனால் அவர்கள் முன்னர் குடியேறத் தடுக்கப்பட்டிருந்த ஏறாவூரில் குடியேறி வாழ அனுமதிக்கப்பட்டனர். வாழைச்சேனையில் குடியேறிய முஸ்லிம்களும் பெரும்பாலும் கத்தான்குடியிலிருந்தே வந்தனர்.
தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் ஊர்களைப் பொறுத்தவரையில், அங்கும் கூட அரபிகளும் இந்திய வியாபாரிகளும் தமது வியாபார நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதிலும் உள்நாட்டுக்கு அவசியமான பொருட்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் அதிகமாகப் பங்கெடுத்தனர். வேடுவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வர்த்தக நீதியான உறவுகள் இருந்து வந்தன. வியாபாரத்துக்காக இலங்கை வந்த பல முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கினார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மட்டக்களப்பு முஸ்லிம்கள்’ என்றே அண்மைக்காலம் வரை ஏனைய பிரதேசத்தவர்கள் அழைத்து வந்திருப்பதால் இவ்விரு பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக ‘மட்டக்களப்பு’ என்றே நோக்கப்படுகிறது. கண்டிப் பகுதியுடன் வர்த்தக தொடர்பைப் பேணி வந்த முஸ்லிம்கள், கண்டி மலைப் பிரதேசத்தையும் கிழக்கிலிருந்த துறைமுக பிரதேசத்தையும் இணைத்துக் கொடுத்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு அருகருகே தமிழ், சிங்கள கிராமங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1971ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் (48.3%) இருக்க, சிங்களவர் (28.2%), தமிழர் (23.2%) ஆகியோர் அதற்கடுத்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
1981ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி அக்கரைப்பற்றில் 12439 தமிழர்களும், 22941 முஸ்லிம்களும், கல்முனை பட்டின சபை எல்லைக்குள் இந்துக்கள் 4779 பேரும், முஸ்லிம்கள் 15940 பேரும் வாழ்ந்தார்கள். இவ்விரு இனங்களும் ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாத அளவுக்கு வியாபாரத்திலும் உறவுகளிலும் ஒன்றில் மற்றையது தங்கியிருக்கின்றன.
எனவே, ஆய்வாளர் ரமீஸ் அப்துல்லாஹ் பின்வருமாறு எழுதுகிறார். ‘(முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான) இவ்வுறவு வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றியிருந்தது. கிழக்கு மாகாண வரலாற்றிலிருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகிறார்கள். பொதுவாக ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள், அதற்கடுத்த கிராமத்தில் தமிழர்கள் என கிழக்கு மாகாணம் முழுவதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லிம் ஆண்கள்’முக்குவர்’ சாதிப் பெண்களை மணந்ததால், தமிழர் முஸ்லிம்களிடையே இரத்த உறவுகளும் உள்ளன. இதனால், தமிழர்களின் சாதி முறை மரபுகளும் முஸ்லிம்களும் உரித்தாளிகளாகின்றனர்.
இங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் சாதி முறை முக்கியத்தும் பெற்றுள்ளதோடு அது மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமய ரீதியானதல்ல. மேலும், இங்கு தாய்வழி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழ் பாரம்பரியமே காரணமாகும்.
மணமகனின் காலைக் கழுவி, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, தாலிகட்டி, ஆராத்தி எடுத்து, பால் பழம் கொடுக்கும் சடங்குகள் முஸ்லிம் திருமணங்களிலும் நிறைவேற்றப்படுகின்றன.
கிழக்கில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் சமயம், சடங்குகள் என்பவற்றை மதித்து கெளரவப்படுத்துகின்றது. கல்முனை ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ்வின் பள்ளி விழா, பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில் தீ மிதிப்பு விழா போன்றவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி இரு சமூகத்தவர்களும் கலந்துகொள்கின்றனர். காரைதீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்டப்பள்ளயத்தில் அவுலியா தர்ஹா போன்ற முஸ்லிம் சமயத் தலங்கள் உள்ளன.
திருவாளர் பாலசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :-
‘இங்கு (மட்டக்களப்பில்) வாழும் தமிழ் இனத்தவருடன் சகோதரத்துவ மனப்பான்மை பூண்டு, நட்புறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோரான இந்துக்களும் இஸ்லாமியரும் மத அடிப்படையில் வேறுபட்டிருப்பினும் வாழ்க்கை முறைகள், பண்பாட்டு அம்சங்களில் ஒன்றுமைகள் உள்ளன.’ முஸ்லிம்கள் நான்கு திருமணம் செய்ய அனுமதி இருந்தும் செய்யாதிருப்பதற்குக் காரணம் தமிழ் மக்களுடன் அவர்கள் முன்னைய காலங்களில் ஏதோ வழிகளில் ஒன்றுபட்டிருந்திருக்கிறார்கள் என்று கூறுவதில் தவறில்லை.’ என ஆய்வாளர் சித்தீக் கூறுகிறார்.
மேற்படி கூற்றுக்களிலிருந்து முஸ்லிம் சமூகம் தனது நம்பிக்கைக் கோட்பாடு, வழிபாடுகள், வாழ்வு முறை போன்ற அம்சங்களில் இந்துக்களது சமூகத்துடன் சிலபோது ஒன்றித்து விட்டமையைக் கூடக் காண முடிகிறது. அது இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற சகவாழ்வாக அமையமாட்டாது. தனித்துவம் காத்த நிலையில் சகவாழ்வைப் பேணுவதனையே இஸ்லாம் அங்கீகரிக்கும் என்பதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்காயினும் ஏனைய பிரதேசங்களாயினும் பொதுவாக முஸ்லிம் - தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக், ‘தமிழ் மொழியை இருசாராரும் பேசுவதால், ஒன்றுபட முடியும். தமிழை முஸ்லிம்கள் தாய் மொழியாகக் கொண்டிருப்பது இரு சமூகங்களுக்கிடையே இறுக்கமான வராற்றுறவு இருந்திருப்பதைக் காட்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்டுமல்லாது கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு பாரம்பரியம், திருமணச் சடங்குகள் போன்ற சிலவற்றில் சில அம்சங்களிலும், சிலவற்றில் முழுவதுமாக ஒருமைப்பட்டுக் காணப்படுகின்றனர்.
இவ்வம்சங்களிலான ஒருமைப்பாடுகள் பல தனிச் சிங்களப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கிடையேயும் காணப்படுவதானது, முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் சிங்கள மக்களுடன் அல்லாது தமிழ் மக்களுடனேயே கூடுதலான உறவுகளை வைத்துள்ளனர் என்று நம்பச் செய்கிறது’ என்கிறார். ‘முஸ்லிம்களது சில பெயர்கள் தமிழர்களின் சில பெயர்களது திரிபுகளாகவும் ஒத்தவையாகவும் உள்ளன.
உதுமாநாச்சி, மெளலாமக்காம் நாச்சியா, சின்னராசா, சந்திரா போன்ற பெயர்களைப் பார்க்கும் போது, முன்னைய காலங்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.’ என்றும் அவர் கூறுகிறார்.
சிங்களப் பகுதி முஸ்லிம்கள் கூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதற்கும், தமிழ் மக்களின் சில பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதற்கும் காரணம் கூறும் ஐ. எல். எம். அப்துல் அkஸ் அவர்கள், அராபியர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலில் குடியேறிய போது, அவர்களைத் தமிழர்களே வரவேற்றனர் என்றும், அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே தமது குடும்ப உறவுகளையும், வர்த்தக உறவுகளையும், திருமண உறவுகளையும் பெருமளவில் வைத்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் பெரியதோர் உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
வடபகுதியில் மட்டுமன்றி, தென்பகுதி முஸ்லிம்களும் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதற்கு பின்வரும் காரணமும் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்டது. இக்காலப் பிரிவில் சோள மண்டலக் கரையை (விoroசீலீntal விost) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ் மொழி முக்கிய இடம்பெற்றது.
அதேவேளை, தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோள மண்டலக் கரையிலுள்ள ‘மஃபர்’ பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும் கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது என ஆய்வாளர் கலாநிதி சுக்ரீ அபிப்பிராயப்படுகிறார்.
எனவே, ஐ. எல். எம். அப்துல் அkஸ் கூறும் காரணத்திலிருந்து கலாநிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்தியாசப்பட்ட போதிலும், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுக்கு மேற்படி இரு காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தமாக நோக்கின், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்தது. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் முஸ்லிம்கள் சகவாழ்வைப் பேணி காலாகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். பழக்கவழக்கங்கள், சமூக உறவுகள், மரபுகள், வாழ்வு முறை என்பவற்றிலும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது.
அண்மைக் காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.
சகவாழ்வின் அவசியம்
இரு தரப்புக்குமிடையில் மனந்திறந்த கலந்துரையாடல்கள், சுமுகமான சூழலில் இடம்பெறுமாயின் மீண்டும் பழைய நிலையைக் கட்டியெழுப்புவது சிரமமான காரியமல்ல.
இவ்விடயத்தில் இரு தரப்பைச் சேர்ந்த புத்தி ஜீவிகளது பங்கு மிகவுமே அவசியப்படுகிறது. சுமுகமாக நிலவிவந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அவை மென்மேலும் தொடராதிருப்பதற்கு திடசங்கற்பம் பூணுவது அவசியமாகும்.
மாறாக கடந்தகால தவறுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவதோ, இடம்பெற்ற தவறுகளை நடக்கவில்லை என்று கூறுவதோ அல்லது அவற்றிற்கு நியாயம் கூறி தப்பிக்க விழைவதோ இதய சுத்தியுடனான சுமுகமான தீர்வுகளைக் காண தடையாக அமையும்.
முஸ்லிம்களோ தமிழர்களோ நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் இடங்கள், அவர்கள் தமக்கென அமைத்துக்கொண்ட வணக்கஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், நிலபுலன்கள், குடியிருப்புக்கள் என்பன அவர்களுக்கே உரியவை. கசப்புணர்வு தொடர்ந்தால் அவற்றிலிருந்து அவர்கள் விலக நேரிடும்.
இது சாத்தியமில்லை. தமக்கென பழக்கப்பட்ட சூழலிலேயே அவர்கள் வாழுவது இலகுவாகவும் உசிதமாகவும் இருக்கும்.
‘தேங்காய்த் துருவலும் பிட்டும்போல்’ ஒருவருக்குள் ஒருவராக பக்கத்துப் பக்கத்து வீடுகளிலும், கிராமங்களிலும் தொழில் துறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிர்ப்பந்தமாக ஒட்டியுறவாடும் முஸ்லிம் - தமிழ் இனங்கள் இனியும் கசப்புணர்வுகளுடன் வாழ்வது மேலும் பேராபத்துக்களையே தரும். எவரும் எவரையும் துரத்துவது பல இன்னல்களுக்கே வழிவகுக்கும். எனவே, சுமுகமாக வாழ்வதற்கும் சக வாழ்வைக் கடைப்பிடிப்பதற்குமான வழிவகைகளைத் தேடுவது உடனடித் தேவையாகும்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பbல் (நZமி)B. A. (Hons) M. A
நன்றி : இஸ்லாமிய சிந்தனை (2008 ஜனவரி - மார்ச்) இதழ்ஜாமிஆ நZமிய்யா வெளியீட்டுப் பணியகம்