Saturday, August 01, 2009

அணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்லஅணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்ல
1945 ஓகஸ்ட் 6ந் திகதி. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானமான இனோலா கே (Enola Gay) உலகின் முதலாவது அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது போட்டது. இக்குண்டுக்கு சின்னப் பையன் (Little Boy) எனப் பெயரிட்டிருந்தார்கள். இந்தச் சின்னப் பையன் செய்த வேலையோ மிகவும் கொடுமையானது. அழகான ஒரு நகரத்தைச் சாம்பல் மேடாக மாற்றியது. ஹிரோஷிமா மீது குண்டு போட்டு மூன்று நாட்களின் பின்- ஓகஸ்ட் 9ந் திகதி அமெரிக்கா இரண்டாவது குண்டை நாகஸாகி நகரில் போட்டது. இரண்டு குண்டு வீச்சுகளிலும் உடனடி யாக இறந்தவர்களினதும் கதிர்வீச்சுத் தாக்கத்தால் பின் னர் இறந்தவர்களினதும் மொத்த எண்ணிக்கை இரண் டரை லட்சத்துக்குக் கூடுதலா னது. உடனடியாக இறந்தவர்க ளில் பலர் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியிருந்தனர். கதிர்வீச்சுத் தாக்கத்தால் இன்று வரை பல ஜப்பானியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அணுகுண்டு வீச்சை நினைவூட்டும் பல சான்றுகள் ஹிரோஷிமாவிலுள்ள சமாதான ‘மியூஸியத்தில்’ வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கல்லொன்றில் கறுப்பு நிறத்தில் ஒரு உருவம் வரையப்பட்டிருப்பது போலக் காணப்படுகின்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட வேளையில் அரை மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு கல்லில் அமர்ந்திருந்த மனிதன் கருகி இறந்த நினைவுச் சின்னமே அது. அரை மைல் தூரத்துக்கு அப்பால் இருந்த மனிதன் கல்லோடு கல்லாகக் கருகிப் போனான் என்றால் குண்டு வீசப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்தவர்களின் கதியைச் சொல்லத் தேவையில்லை.

ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா ஏன் குண்டு போட்டது என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. ஜப்பானைப் பணிய வைப்பதற்காகவே அக்குண்டுகள் போடப்பட்டன என்ற அமெரிக்காவின் உத்தியோகபூர்வ காரணம் ஏற்கக் கூடியதல்ல. ஹிரோஷிமா இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தெற்கு ஜப்பானின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவப் பிரிவின் தலைமையகம் அங்கே இருந்தது. அதே போல நாகஸாகியும் முக்கியமான நகரம். அது யுத்தோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம். இக் காரணங்களுக்காகவே இரு நகரங்களிலும் அமெரிக்கா குண்டு போட்டது எனக் கூற முடியாது.

அமெரிக்கா குண்டு போட்ட நேரத்தில் ஜப்பான் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. பல நாடுகளில் மோசமான யுத்தக் கொடுமைகளைப் புரிந்த ஜப்பான் 1945ம் ஆண்டின் பின்னரைப் பகுதியின் ஆரம்ப காலத்தில் தோற்றுப்போன நாடு என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஜூன் மாத நடுப்பகுதியில் நடந்த ஒக்கினாவா சமரில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் வீரர்களை ஜப்பான் இழந்தது. 1945 ஜுலை 26ந் திகதி நேசநாடுகள் வெளியிட்ட ‘பொட்ஸ்டாம்’ பிரகடனத்தில் ஜப்பான் சரணடைவதற்கான நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. தோல்வியடைந்து சரணடையும் நிலையில் ஜப்பான் இருந்ததாலேயே அது சரணடைவதற்கான நிபந்தனைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டன.

ஜப்பான் நேச நாடுகளிடம் 1945 ஓகஸ்ட் 14ந் திகதி சரணடைந்தது. அதாவது ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்ட ஒன்பதாவது நாள். ஜப்பான் சரணடைவதற்கு அமெரிக்காவின் குண்டு வீச்சு காரணம் எனக் கூற முடியாது. குண்டு போடப்படாவிட்டாலும் ஜப்பான் நிச்சயமாகச் சரணடைந்திருக்கும். அந்த அளவுக்கு அது பலவீனப்பட்டிருந்தது. அந்த நாட்களில் வெள்ளை மாளிகையில் படையணித் தலைவராக இருந்த வில்லியம் லீஹி இதை உறுதிப்படுத்துகின்றார். தனது நினைவுக் குறிப்புகளில் அவர் இவ்வாற கூறியுள்ளார்.

“இந்த மோசமான ஆயுதத்தை ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் பாவித்தமை ஜப்பானுக்கு எதிரான எங்கள் யுத்தத்தில் எவ்வித பலனையும் தரக்கூடியதல்ல. ஜப்பானியர்கள் ஏற்கனவே தோல்வியடைந்து சரணடைவதற்குத் தயாராக இருந்தனர்.”

பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்த டுவைற் ஐசனோவர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஐரோப்பாவில் நேச நாடுகளின் தளபதியாகப் பணியாற்றியவர். அணுகுண்டை அந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தக் கூடாதென யுத்த அமைச்சர் ஹென்றி ஸ்ரிம்சனிடம் தான் ஆட்சேபனை தெரிவித்ததாக அவர் பின்னர் கூறினார்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, ஜப்பானைப் பணியவைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் வேறு நோக்கத்துக்காகவே ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா அணுகுண்டு போட்டது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. அந்த வேறு நோக்கம் என்ன?

அமெரிக்காவின் முதலிரு அணுகுண்டுகளே ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் போடப்பட்டன. நேச நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கு பற்றிய ‘பொட்ஸ்டாம்’ மகாநாடு 1945 ஜுலை மாத பிற்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வெற்றிகரமாக அணுகுண்டு பரீட்சிக்கப்பட்ட செய்தி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானில் குண்டு போடுவதற்கான உத்தரவை அவர் அங்கிருந்தே பிறப்பித்தார். தோற்றுப் போயிருக்கும் ஜப்பானில் குண்டு போடுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது.

ரஷ்யாவிடமும் பிரித்தியானியாவிடமும் அப்போது அணுகுண்டு இருக்கவில்லை. இவ்விரு நாடுகளிடமும் இல்லாத முக்கிய ஆயுதம் தன்னிடம் இருப்பதையும் அதனால் பேரழிவை உண்டாக்க முடியும் என்பதையும் இரண்டு நாடுகளுக்கும் நிரூபித்துக் காட்டி அவற்றை மறைமுகமாக அச்சுறுத்தும் நோக்கத்துடனேயே அமெரிக்க ஜனாதிபதி குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். யுத்தத்துக்குப் பிந்திய சமாதான காலத்தில் அமெரிக்காவிடம் வாலாட்டினால் இதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை அதில் அடங்கியிருந்தது.

தோற்றுப்போய் சரணடைவதற்குத் தயாராக இருந்த ஜப்பான் மீது குண்டு போட்டு நேச நாடுகளை மறைமுகமாக அச்சுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி மோசமான மனிதப் பேரழிவையே ஏற்படுத்தியது.

sunday thinakaran
Reactions:

3 comments:

  1. நல்ல பதிவு,

    ReplyDelete
  2. சிறந்த ஓகஸ்ட் மாத முதல்வாரத்திற்கு பொருத்தமான பதிவு. தொடர்ந்தும் இதுபோன்ற வரலாற்று பதிவுகளை பதியுங்கள் நண்பரே.. வாழ்துக்கள்.

    ReplyDelete