Subscribe Us

ஆப்கான் அமெரிக்காவுக்கு ~பொறி' ஆகிவிட்டது

வளர்ந்த கடா மார்பில் பாய்கின்றது.

ஆப்கானிஸ்தானில் வைத்த காலை எடுக்க முடியாமல் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் திண்டாடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகக் கூடுதலான படையினரைக் கொண்டுள்ள நாடு பிரித்தானியா. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட 9000 பிரித்தானியப் படையினரில் 234 பேர் இதுவரையில் சண்டையில் இறந்துள்ளனர்.
இது பிரித்தானியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரருக்கு அவசியமாகத் தேவைப்படும் ஹெலிகொப்ரர்கள், கவச வாகனங்கள் போன்றவற்றைப் போதுமான எண்ணிக்கையில் அனுப்பாததாலேயே படைவீரர்கள் இறக்க நேர்ந்தது என்ற குற்றச்சாட்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து படை வீரரைத் திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு வலுத்து வருகின்றது.
பிரித்தானியாவில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரர் விவகாரம் தேர்தலில் தொழிற் கட்சிக்குப் பாதகமாக அமையலாம் எனக் கருதிய பிரதமர் கோர்டன் பிறவுண் ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச மகாநாடொன்றை லண்டனில் நடத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்.
அடுத்த வருட முற்பகுதியில் இந்த மகாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் படைவீரருக்குப் போதியளவு பயிற்சி அளித்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையைத் தீர்மானிப்பது இம் மகாநாட்டின் பிரதான நோக்கம்.
பிரித்தானியா மாத்திரமன்றி, மற்றைய நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதையே விரும்புகின்றன.
சர்வதேச மகாநாடொன்றைக் கூட்டி ஆப்கான் நிலைமை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆலோசனையைப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேர்கெல், பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி ஆகியோர் செப்ரெம்பர் மாதத்தில் கூட்டாக முன்வைத்தனர். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே லண்டனில் மகாநாடு நடத்துவதற்கு கோர்டன் பிறவுண் ஏற்பாடு செய்கின்றார்.
இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புகின்ற போதிலும் தனியாக வெளியேறுவதற்குச் சாதகமாகச் சமகால சர்வதேச ஒழுங்கு இல்லை. எனவேதான் மகாநாடு கூட்டித் தீர்மானிக்க முனைகின்றன.
இதே நேரம், இரண்டு வருட காலத்துக்குள் கூடுதலான படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்குத் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் 26607 அமெரிக்கப் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 48250 ஆக உயர்ந்தது. 2009 ஜனவரியில் 3000 படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பெப்ரவரியில் மேலும் 17000 பேர் அனுப்பப்பட்டனர். மேலும் துருப்புகளை அனுப்புவதற்கு ஒபாமா முடிவு செய்திருக்கின்றார்.
நேச நாடுகள் தங்கள் படையினரைத் திருப்பி அழைப்பது பற்றி ஆலோசிக்கும் போது அமெரிக்கா மேலும் மேலும் துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகின்றது.

அமெரிக்காவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அமெரிக்காவினாலேயே உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா வளர்த்தெடுத்தவர்களே தலிபான்கள். பாகிஸ்தானில் தளங்களை அமைத்துப் பெருமளவு பணச் செலவுடன் தலிபான்களை அமெரிக்கா வளர்த்தது.
தேவையான ஆயுதங்களும் பாகிஸ்தானுக்கூடாக வழங்கப்பட்டன. தலிபான்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளித்ததால் இன்று அவர்கள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. அமெரிக்கா வளர்த்த கடா இன்று அதன் மார்பிலேயே பாய்கின்றது.
ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலான படையினரை அனுப்புவதோடு பாகிஸ்தானுக்கும் சகல விதமான உதவிகளைச் செய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தலிபான்கள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதால் அவர்கள் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி தேவை.
மேலும், பாகிஸ்தானுக்குள் இருக்கும் தலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
இதனால் பாகிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதி, ஆயுத, இராஜதந்திர உதவிகளைச் செய்வதை அமெரிக்கா தவிர்க்க முடியாது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அடிக்கடி நிதியுதவி வழங்கி வருகின்றது. 750 கோடி நிதியுதவி வழங்கும் ஆவணத்தில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒபாமா கையொப்பம் இட்டார். இது அமெரிக்காவின் பிந்திய நிதியுதவி.
இராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சி பலனளிக்காதது போலவே அரசியல் ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியும் திருப்திகரமான பலனைத் தரவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஹமிட் கர்ஸாய் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லாவிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். கர்ஸாய் பெற்ற வாக்குகள் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் என அறிவிக்கப்பட்டது. கர்ஸாயின் வெற்றியை ஏற்க முடியாது என்ற சமிக்ஞையை அமெரிக்கா வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்குமான அமெரிக்கத் தூதுவர் றிச்சாட் ஹோல்புறூக் கர்ஸாயின் ஆதரவாளர்கள் பெருமளவு வாக்குத் திணிப்புச் செய்ததால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பகிரங்கமாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுபெற்ற தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழு கர்ஸாயின் வாக்கு வீதத்தை 54 வீதத்திலிருந்து 48.6 வீதமாகக் குறைத்தது. தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவொன்று வெற்றிபெற்ற வாக்காளரின் வாக்கு வீதத்தைக் குறைத்துப் பிரகடனப்படுத்திய நிகழ்வு இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை. இந்த ஆணைக் குழு அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டதென்பது தெரிந்த விடயம்.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பதை முழு உலகமும் அறியும். பெருமளவில் வாக்குத் திணிப்பு இடம்பெற்றது.
வாக்காளர்களாக 12 வயது நிரம்பாதவர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அப்துல்லாவும் தேர்தல் முறைகேடுகள் பற்றி முறைப்பாடு செய்திருந்தார். எனினும் தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரகடனம் அதிரடியானது.
ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்தின்படி, அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்குக் கூடுதலாக எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெற வேண்டும். நவம்பர் 7ந் திகதி இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெறுமென அறிவிக்கப் பட்டது.
தேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பானவர் என்பதால் வாக்களிப்புக்கு முன் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால் அப்துல்லா நவம்பர் 1ந் திகதி போட்டியிலிருந்து விலகினார். கர்ஸாய் தெரிவானதாகத் தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியது.
கர்ஸாய் அமெரிக்காவின் ஆள். அமெரிக்காவினால் ஜனாதிபதிப் பதவியில் இருத்தப்பட்டவர். அவர் தோற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமல்ல.
அண்மைக் காலத்தில் கர்ஸாய் அமெரிக்கா கீறிய கோட்டுக்கு அப்பால் சென்று செயற்பட முற்பட்டதால், அவரை வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனேயே அவரது தேர்தல் முடிவுகளைப் பற்றி அமெரிக்கா பிரச்சினைகளைக் கிளப்பியது. குறிப்பாக தேர்தல் பிரசார காலத்தில் அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் விதத்தில் கர்ஸாய் நடந்துகொண்டார்.
அஹமட் ரiட் டொஸ்ரம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந்தவர். கர்ஸாய் அவரை அழைத்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் குவாஸிம் பாஹிம் போதைவஸ்துக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவினால் உட்படுத்தப்பட்டிருப்பவர்.
இவரைத் தனது உப ஜனாதிபதியாக கர்ஸாய் பிரகடனப்படுத்தினார். இச் செயற்பாடுகளையிட்டுத் தனது அதிருப்தியைக் கர்ஸாய்க்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தல் முடிவு பற்றி அமெரிக்கா பிரச்சினை கிளப்பியது.
ஆப்கானிஸ்தானில் இன அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் கர்ஸாய் பெரும்பான்மையான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவரென்பதால் இரண்டாவது சுற்று வாக்களிப்பிலும் தாஜிக் இனத்தைச் சேர்ந்த அப்துல்லாவிலும் பார்க்க அவர் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியாதவையல்ல.
அமெரிக்காவின் சமிக்ஞை கர்ஸாயிடம் மாற்றம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கர்ஸாய் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவருக்கு இரு புறத்திலும் டொஸ்ரமும் பாஹிம்மும் நின்றார்கள்.
இது அமெரிக்காவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் செயல். ஆனால் உடனடியாக அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது. அதிரடி நடவடிக்கை பாதகமான விளைவுகளுக்கு வழிகோலலாம்.
ஆப்கானிஸ்தானை அமைதியற்ற பிரதேசமாக அமெரிக்கா ஆக்கியிருக்கும் பின்னணியிலேயே ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் எட்டாவது ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாளிலேயே இப்பரிசு பற்றிய அறிவித்தல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
சங்கர சேயோன்

0 Comments:

Post a Comment