Subscribe Us

இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது- ராஜினாமா கடிதத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது. அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையை வெளிக்காட்டுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாத அதேவேளை பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலைமை எதிர்காலத்தில் மற்றுமொரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பாதுகாப்பு செயலர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய இந்தத் திடீர் முடிவுக்கான 16 காரணங்களை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியிருந்தார்.இவ்வாறு அவரால் குறிப்பிடப்பட்ட அந்த 16 காணரங்களும் பின்வருமாறு :
01. இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வரையில் நான் இராணுவத் தளபதியாக நீடிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆயினும் அது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டமாக அமையும் என்று கூறி சில சக்திகள் உங்களை திசை திருப்பியதால் எனது கோரிக்கையைத் தட்டிக் கழித்தீர்கள். அத்துடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்ட நிலையில் இராணுவத் தளபதி பதவியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் பின்னணியில் என்ன சதித்திட்டம் இருக்கின்றது என்பது இராணுவத்தினருக்கு நன்றாகத் தெரியும்.
02. யாழ்.கட்டளையிடும் அதிகாரி சேவையை கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை என்னையடுத்து இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளாது, 'ஹோல்டிங் போமேஷன்' என்ற வகையிலான கட்டளையிடும் அதிகாரியாக மட்டுமே இறுதிக் கட்டப் போரில் கடமையாற்றியவரும், ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவருமான ஒருவரை எனக்கு பதிலாக நியமித்தீர்கள்.
03. நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைத் திசை திரும்பும் வகையில், எந்தவொரு அதிகாரமும் இல்லாத, அதேநேரம் தொடர்பாடல் எனும் பொறுப்பை மாத்திரம் கொண்டதும் இராணுவத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவிக்கு என்னை நியமித்தீர்கள். இராணுவ வெற்றியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே இராணுவத் தளபதி என்ற பதவியை துறக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனக்கு கட்டாயப்படுத்தினார். அந்த வகையில் இரண்டு மாதங்களுக்குள் நான் இந்த பதவியிலிருந்து விலகுவேன் என்று ஜனாதிபதியாகிய உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். இருப்பினும் எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக என்னால் யுத்த வெற்றிக்கு காரணமாகவிருந்த இராணுவ வீரர்களுக்கான உதவிகளைக் கூட வழங்க முடியாமல் போனது.
04. அதேவேளை எனக்கு வழங்கப்பட்ட இந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவியானது என்னை தட்டிக்கழிப்பதற்காக வழங்கப்பட்ட பதவியாகும். இந்தப் பதவியில் பல்வேறு அதிகாரங்கள் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், நான் பதவிக்கு வந்ததன் பின்னர் பாதுகாப்பு செயலாளரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றில், எனது பதவி இராணுவத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டது என்றும் அதனையும் மீறிய அதிகாரம் எனக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எனக்கு அதிகாரங்களை வழங்க நீங்களும் அரசாங்கமும் விரும்பவில்லை என்பதையும் என் மீது உங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
05. இராணுவ உயர் அதிகாரிகளினுடனான பாதுகாப்பு செயலாளர் முப்படைகளையும் உள்ளடக்கிய அதிகாரம் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படுமாயின் அது இக்கட்டான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று தெரிவித்தார். இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் கூறப்பட்ட இக்கருத்தினால் நான் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானேன்.
06. இராணுவ வெற்றி கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இனித் தேவைப்படாது என்றும் தேவைக்கதிகமான இராணுவ பலமொன்று நாட்டில் இருப்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியாகிய உங்களால் தெரிவிக்கப்பட்டது. இராணுவ வெற்றி தொடர்பில் பெருமைப்பட்டுக் கொண்ட நீங்கள், இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தமை மட்டமான ஒரு விடயமாகும். எப்பொழுதுமே பெறமுடியாதென கருதிய வெற்றியை ஒரு வாரத்திற்குள், உங்களுக்கே சாதகமான இராணுவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட நிலையிலும் அந்த இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளீர்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் உணர்ந்து கொண்டேன்.நான் இராணுவ தளபதியிலிருந்து விலகிய நிலையிலும் நீங்கள் இந்தக் கருத்தினை மற்றுமொரு தடவை முன்வைத்தீர்கள். இந்தக் கருத்து எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியதுடன் யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் அமைந்தது.
07. தற்போதைய இராணுவத் தளபதி பதவியேற்றதன் பின்னர் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியாக செயற்பட்ட எனது மனைவி மற்றும் அவருடனிருந்த கனிஷ்ட பிரிவு அதிகாரிகளைக் கூட இடமாற்றம் செய்தார். இது அதிகாரிகளின் நடுநிலையான தன்மைக்கு சவால் விடுப்பதுடன், என்னுடைய தலைமைத்துவம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி இராணுவ அதிகாரிகளை தைரியமற்ற தன்மைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
08.தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது.இந்நிலைமை என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடிக்கக் கூடிய திறமையினையும் தொழில்வல்லமையையும் கொண்ட இலங்கை இராணுவத்தின் கீர்த்தி இதனால் சர்வதேசத்தின் முன்னிலையில் தலைகுனிய நேரிட்டது. வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த என்னுடைய தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரின் நடவடிக்கையே இந்த சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
09.தனிப்பட்ட சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். இந்தக் காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்டின் வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு வேறு ரெஜிமென்ட்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டிருந்த மேற்படி வீரர்கள் ஒரேஇரவில் பாதுகாப்பு செயலரின் எண்ணத்திற்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டமையானது வருந்தத்தக்க விடயமாகும்.
10. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய கஜபா ரெஜிமண்டின் வீரர்கள் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் சேவைக்கு அமர்த்தப்பட்டமையானது இராணுவத்தின் நடுவுநிலைமை சிதைவடைந்ததை எடுத்துக்காட்டியது. அத்துடன் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதும் இதன்மூலம் வெளிப்படையாகியது. இந்த நடவடிக்கைக்கு இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மையாகும்.
11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட ரீதியிலான ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ளாது, என்னையொரு தேசத்துரோகியாக காண்பிக்கும் வகையில் அரசின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பொய்ப்பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளித்தமை என்னை விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
12. நான் வெளிநாடு சென்றிருந்த போது எனது கடமையை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு பதில் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இதனால் நான் வகிக்கும் பதவி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருப்பதாக பல தரப்புகளிலும் பேச்சு அடிபட்டது. இதுவே உண்மை நிலையுமாகும்.
13. சாதாரண மட்டத்தில் இருந்து தரமுயர்த்தி, என்னால் பெரும்பாடுபட்டு கட்டிக்காக்கப்பட்ட இராணுவ சேவையிலிருந்து நான் தற்போது புறந்தள்ளப்பட்டமையானது கவலைக்குரிய விடயமாகும்.
14. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை மென்மேலும் வருத்துகின்றது. அவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாழ வைப்பதற்காக, விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து மீட்கும் முயற்சியில் இராணுவ வீரர்கள் பலரும் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். இருப்பினும் அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையைக் குறித்துக் காட்டுகிறது. தங்களுடைய பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வரையில் அந்த மக்களின் உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அம்மக்களுக்கு இடமளிக்க வேண்டும்.
15. என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் உங்களுடைய அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாமையானது, பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருவதற்கு சமமானது. அத்துடன் எதிர்க்காலத்தில் மற்றுமொரு போராட்டம் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் முடிவில் அனைத்து இன மக்களும் எதிர்ப்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன், இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அழிவும் வஞ்சகமும் மென்மேலும் தலையெடுத்துள்ளது. ஊடக அடக்குமுறை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எமது தாய் நாட்டுக்கு சமாதானத்தையும் சமரசத்தையும் கொண்ட யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடியுமானால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரின் முயற்சி மற்றும் தியாகங்கள் வீண் போகாது.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18990

1 comment:

  1. மிகவும் நல்லவர்கள் மாதிரி இவர்களால் இத்தனை கொலைகள் செய்த பின்பும் எப்படி பேசமுடிகிறது.

    ReplyDelete