Subscribe Us

போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்

இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்திய 'றோ' அமைப்பின் முகவர்கள் 50 பேர் இலங்கை அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை இலங்கை அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் இருந்து 'றோ' செயற்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் இலங்கையில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
news: tamilwin.org

0 Comments:

Post a Comment