Sunday, October 11, 2009

ஹமீட் கர்ஸாய் தனிமைப்படுகிறார்


ஓகஸ்ட் 20ம் திகதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி நியாயமான முறையில் பெறப்பட்டதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இத்தேர்தல் அமெரிக்கா வகுத்த சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்கா அனுமதிக்காததால் வேட்பாளர்கள் தனிநபர்களாகவே போட்டியிட்டனர். ஹமீட் கர்ஸாயும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாவும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் நின்றனர்.
கர்ஸாய் இத்தேர்தலில் பலமுறைகேடுகளை நடாத்தி வெற்றிபெற்றுள்ளதாக அப்துல்லா ஊடகங்களுக்கு கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிச்சார்ட் ஹோல்புறூக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். கர்ஸாய் ஆட்கள் செய்த பெருமளவிலான வாக்குத் திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஹோல்புறூக் கூறியிருப்பது முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை உறுதிப்படுதுகின்றது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதென்ற தகவல் இப்போது வெளிவருகின்றது. வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் இருபது வீதத்துக்கு மேற்பட்டோர் உரிய வயதெல்லையை அடையவில்லை என்று தேர்தலுக்கு பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பன்னிரெண்டு வயதிற்குட்பட்டவர்க ளும் வாக்காளர்க ளாக பதிவு செய் யப்பட்டிருக்கின்றார் களாம். ஆப்கானிஸ்தானின் மூன்றிலொரு பகுதி இப்போதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். தேர்தலில் வாக்களிப்பவர்களின் விரல்கள் வெட்டப்படும் என்று அச்சுறுத்தியுமிருந்தனர். இந்த நிலையில் பெருந்தொகையானோர் வாக்களித்திருப்பார்கள் எனக் கருத முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேர்தல் ஆணையம் நாற்பது வீதத்துக்கும் ஐம்பது வீதத்துக்கும் இடைப்பட்டோர் வாக்களித்திருப்பதாக கூறுகின்ற போதிலும் சுதந்திரமான கணிப்பீடுகள் இருபது வீதமென தெரிவிக்கின்றன.
கர்ஸாய் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அப்பதவிக்கான முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பவராக இருப்பார் எனக் கருதுவதற்கில்லை. தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாகவும் வேறு காரணங்களுக்காகவும் அமெரிக்கா கர்ஸாயை ஓரங்கட்டுமென எதிர்பார்க்கலாம். கர்ஸாய் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டவர். அவரை அமெரிக்காவே ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தியது. இப்போது அவரைக் கைவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தேர்தல் முறைகேடுகளையிட்டு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருப்பது கர்ஸாயை கைவிடுவதற்கு தயாராகுவதையே புலப்படுத்துகின்றது. தேர்தல் காலத்தில் முன்னாள் யுத்தக் குழுக்களின் தலைவர்களின் ஆதரவை கர்ஸாய் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை. அஹமட் ரiத் டொங்டம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் துருக்கிக்குச் சென்று வாழ்ந்து வந்தவர். இவரை கர்ஸாய் தேர்தலில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு அழைத்தமை அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை.
டொங்டம் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு வந்து கர்ஸாய்க்காக தேர்தல் பரப்புரை செய்தார். கர்ஸாயின் உப ஜனாதிபதியாக Running mate முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மட் காஸிம் பாஹிம் கர்ஸாயினால் நிறுத்தப்பட்டார்.
போதைவஸ்து கடத்தல் தொடர்பாக அமெரிக்கா பாஹிமுக்கு எதிராக விசாரணை நடத்துவது தெரிந்திருந்தும் கர்ஸாய் அவரை உப ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி யதையிட்டு அமெரிக்கா சீற்றமடைந்திருக்கின்றது. சுருக்கமாகக் கூறுவதானால் கர்ஸாயை தூரத்தில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துவிட்டது எனலாம். அதேநேரம் ஆப்கானிஸ்தானில் தனது பிடியை நெகிழ விடவும் அமெரிக்கா தயாராக இல்லை.
பிரதான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் கூடிய பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிப்பது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. கர்ஸாயின் அதிகாரத்தை நறுக்குவதே இந்த நியமனத்தின் நோக்கம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

thinakaran
Reactions:

0 comments:

Post a Comment