பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார். 
இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.
சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.
"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 
இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  
வீரகேசரி
http://asfarmnm.blogspot.com/2010/03/blog-post.html







 
0 Comments:
Post a Comment