Subscribe Us

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை



அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.
மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment