Subscribe Us

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்

தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.



இந்த ஹார்மோன்களின் பணி என்ன?



இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.



தைராய்டு உடலின் பல பணிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இந்தத் தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? நம் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டும் Thyroid Stimulating Hormone (TSH) என்ற திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம் தைராய்டு சுரப்பிக்கு மட்டுமேயானது. இது தைராய்டு திரவம் உருவாவதிலும் சுரப்பதிலும் நேரடிப் பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவை என்பன போன்றவற்றையெல்லாம் இந்தத் திரவம் கண்காணிக்கிறது.



தைராய்டு சரியான அளவில் இருப்பதற்கு அயோடின் மிகவும் அவசியம். ஏனெனில், தைராய்டு ஹார்மோன்கள் அயோடினை அடிப்படையாகக் கொண்டவை. உடலில் அயோடின் குறையுமானால், தைராய்டு சுரப்பி ஏறுக்குமாறாகப் பணிசெய்யத் தொடங்கிவிடும். எனவே உணவில் அயோடின் தேவையான அளவு இருக்கவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள நீர் மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒருவேளை அப்பகுதியில் அயோடினின் அளவு குறையுமானால் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.



தைராய்டுக் கோளாறுகளின் வகைகள்:



தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமையால் ஏற்படும் கோளாறுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.




ஒன்று : முன் கழுத்துக்கழலை எனப்படும் காய்டர்(Goiter). கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பெரிதாகி (வீங்கி) பைகள் போல் தொங்கும். தைராய்டு சுரப்பி இரண்டு முதல் பத்து மடங்கு வரை பெரிதாகக் கூடும். கழுத்துப்பகுதியில் சிறிய அளவு வீக்கம் ஏற்பட்டால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரிவரக் கவனிக்காவிடில், இது புற்றுநோய்க்கும் வழி கோலிவிடக்கூடும்.



இரண்டு: தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படலாம். மிகவும் குறைந்த தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hypothyroidism) அல்லது மிகவும் அதிகமான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hyperthyroidism)

இரண்டுமே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல விதமான குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடியவை.இவ்வகைக்கோளாறுகளை மிக எளிமையான இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து விடமுடியும். சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் பழைய இயல்பான நிலைமைக்கு வெகு விரைவில் கொண்டுவரவும் முடியும்.



தைராய்டுக்குறைவு நோய் (Hypothyroidism)



தைராய்டுக் கோளாறுகளில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது இந்த Hypothyroidism என்ற கோளாறால்தான். அதிகச் சுரப்பால் பாதிக்கப் படுபவர்களை விட குறைவான சுரப்பால் பாதிக்கப் படுபவர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாவார்கள். தைராய்டு சுரப்பி T3 மற்றும் T4 எனும் இரண்டு வகை திரவங்களைச் சுரக்கிறது என்று முன்பே கண்டோம். தைராய்டு சுரப்பி இத்திரவங்களைத் தேவைக்கு மிகக் குறைவாகச் சுரக்கும்பொழுது பல விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவர்களையே குழப்பிவிடக்கூடியவை. தைராய்டுக்கான பரிசோதனை செய்யாதவரை, இவை வேறு பல நோய்களுக்கான அறிகுறிகளாகக் கருதப் பட்டு மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் தைராய்டுக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுவது நன்மை பயக்கும்.



அடிக்கடி மயக்கம் அல்லது தளர்ச்சி உண்டாகுதல், கைகால்களில் தசைப்பிடிப்பு, விரல்கள் நடுங்குதல், நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் தடுமாறுதல், தசைகள் வீக்கமடைதல், திடீரென அதிக அளவு எடை கூடுதல், தோல் வறண்டு விடுதல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை, முகம் உப்புதல், மனச்சோர்வு, தொண்டை அடைப்பு,இதயத்துடிப்பு இயல்பை விடக் குறைதல், முடி கொத்துக்கொத்தாக உதிர்தல், தொண்டை வீக்கம், மலட்டுத்தன்மை அல்லது கருச்சிதைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியன தைராய்டு குறைவினால் தோன்றும் சில உடல் உபாதைகள்.



தைராய்டு அதிகம் சுரத்தல் (Hyperthyroidism)



தைராய்டு சுரப்பி அதிக அளவு தூண்டப்படும்பொழுது தேவைக்கு மிக அதிகமான ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. இது Hyperthyroidism என்று அழைக்கப் படுகிறது. இதற்கான அறிகுறிகள் உடல் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, சிறிதளவு கூட வெப்பத்தைத் தாங்க இயலாமை, உடல் எரிச்சல், எப்பொழுது பார்த்தாலும் பசித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுதல், தூக்கமின்மை, மூச்சு விட இயலாமை, எடை கன்னாபின்னாவென்று குறைதல், பலவீனம், ஈரமான சருமம், அதிக அளவு இதயத்துடிப்பு ஆகியவை.



தைராய்டுக்கோளாறுகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரக்கூடும்?



யார் வேண்டுமானாலும் தைராய்டுக்கோளாறினால் பாதிக்கப் படக்கூடும் என்றாலும் கீழ்க்கண்ட பிரிவினர் அதிக எச்சரிக்கையாக இருப்பதும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.



1. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

2. சமீபத்தில் பிரசவித்தவர்கள்

3. அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள்

4. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடை இழப்பு ஏற்பட்டவர்கள்.

5. அடிக்கடி உடல் தளர்ச்சி ஏற்படுபவர்கள்

6. குழந்தையின்மை மற்றும் மாதவிடாய்க்கோளாறுகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள்

7. ஏற்கனவே தைராய்டுக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்



இத்தைராய்டுக்கோளாறுகள் ஏன் உருவாகின்றன? இவற்றை எதிர் கொள்வது எப்படி? இவற்றுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில்........



- ஈழநேசன்

0 Comments:

Post a Comment