ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727)[1], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, நியூட்டனுக்கும் பங்கு உண்டு.
பிற பங்களிப்புகள்
புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.
வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்
வரலாறு
நியூட்டன், லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.
படிப்பு
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 ல், கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலீலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார். 1665 ல், பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.
ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு
நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.
1667 ல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) மூலமும் வெளிக்கொணர்ந்தார்.
நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.
1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்.